ஊட்டியில், பலத்த மழைக்கு வீடுகள் சேதம் - மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ஊட்டியில், பலத்த மழைக்கு வீடுகள் சேதம் - மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 10:30 PM GMT (Updated: 9 Aug 2019 7:02 PM GMT)

ஊட்டியில் பலத்த மழைக்கு வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை விடிய, விடிய இடைவிடாமல் பெய்து வருகிறது. பலத்த மழையால் மரங்கள் விழுதல், மண்சரிவு, சாலை துண்டிப்பு, வெள்ளம் ஏற்பட்டு வருகின்றன. ஊட்டியில் நேற்றும் மழை தொடர்ந்தது. தொடர் மழை காரணமாக ஊட்டி காந்தல் குருசடி காலனி, கஸ்தூரிபாய் காலனி, ஆர்.சி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் 15 வீடுகள் இடிந்து சேதமடைந்து உள்ளன. இந்த வீடுகளை ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ், தாசில்தார் ரவி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

ஊட்டி-குருத்துக்குளி சாலை தீட்டுக்கல் சந்திப்பில் இருந்து பசவக்கல் வரை விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் சாலையில் படிந்து உள்ளது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதன் காரணமாக அரசு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. குருத்துக்குளி கிராமத்துக்கு நஞ்சநாடு வழியாக மக்கள் சென்று வருகின்றனர். சாலையில் தேங்கிய மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஊட்டி அருகே பார்சன்ஸ்வேலி அணைக்கு செல்லும் சாலையில் மின்ஒயர்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. அதனால் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டியின் ஒரு பகுதி, மேல்கவ்வட்டி, குருத்துக்குளி, பார்சன்ஸ்வேலி கிராமம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லை. அங்குள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்து வருகிறார்கள். பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேருடன் சரிந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்வாள் மூலம் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.

அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அந்த சாலையில், யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அனுமாபுரம் பகுதி, தங்காடு-முக்கிமலை சாலை, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று முன்தினம் ஊட்டியில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தத்தளித்தபடி சென்றது. ஊட்டி காந்தல் குருசடி காலனியில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

அதனை தொடர்ந்து குடியிருப்புகளில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டு காந்தல் முக்கோணத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் கஸ்தூரிபாய் காலனியில் குடியிருப்புகளையொட்டி உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த முகாமில் குழந்தைகள் உள்பட 200 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால், உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது. மருத்துவ வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி-இத்தலார் சாலை எம்.பாலாடா கிராமத்தில் கடைகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் நள்ளிரவில் வடிந்தது. அதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பின்னர் காலையில் சேறும், சகதியுடன் இருந்த வீட்டு உபயோக பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். கப்பத்தொரை, கல்லக்கொரை, எம்.பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களையொட்டி கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

அந்த கால்வாயில் அடித்து வரப்பட்ட மண் படிந்ததால், தண்ணீர் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்ட பல ஏக்கர் விளைநிலங்களில் புகுந்தது. பயிர்களை தெரியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து இருந்தது. கால்வாயில் தண்ணீர் வரத்து குறைந்த பின்னர் தான் நிலங்களில் தண்ணீர் வடிந்தது. சில இடங்களில் தண்ணீர் வடியாமல் அப்படியே காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊட்டி அருகே முள்ளிக்கொரை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பயிர்கள் நாசம் அடைந்தன. ஊட்டியில் ரெயில்வே குடியிருப்புக்கு செல்லும் சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சாலையில் ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஊட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடி கொண்டு இருக்கிறது.

இதேபோன்று பலத்த மழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நெலாக்கோட்டை 9-வது மைல் கூவச்சோலை பகுதியில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. நெல்லியாளம் டேன்டீ, பொன்னானி, வாழவயல் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்தது.

மேலும் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. சேரம்பாடி அருகே விக்கலாடி, பாட்டவயல் அருகே வெள்ளேரி ஆகிய பகுதிகளில் ஆற்று வெள்ளம் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி சந்தித்து, ஆறுதல் கூறினார். சேரங்கோடு தேயிலை தோட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டது. கூடலூர் அருகே தேவாலாவில் தாழ்வான பகுதியில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் கூடலூர்-கேரள எல்லை யான நாடுகாணியில் வெளிமாநில சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கோத்தகிரி அருகே அண்ணா நகரில் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. 

Next Story