கல்லூரி மாணவியை காதலித்து கொன்ற விவகாரம்: காதலனின் தந்தை உள்பட 2 பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை


கல்லூரி மாணவியை காதலித்து கொன்ற விவகாரம்: காதலனின் தந்தை உள்பட 2 பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Aug 2019 5:45 AM IST (Updated: 10 Aug 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவியை காதலித்து கொன்ற விவகாரம் தொடர்பாக காதலனின் தந்தை உள்பட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த கல்லூரி மாணவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினார்கள்.

தாராபுரம்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மூத்த மகள் தமிழரசிக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் முத்தரசி தாராபுரம் அருகே ஆத்துக்கால்புதூரில் உள்ள உறவினர் வள்ளியாத்தாள் வீட்டில் தங்கி படித்து வந்தார். முத்தரசி கொளத்துப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த போது ஆத்துக்கால்புதூர் புதுத்தெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் பரத் (வயது 29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களுடைய காதல் விவகாரம் முத்தரசியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து வள்ளியத்தாள், முத்தரசி பள்ளி படிப்பை முடித்ததும் கேத்தம்பட்டியில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு முத்தரசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். அவரது தந்தை பாண்டியன் குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால், சரியாக வீட்டிற்கு செல்லாமல் டீக்கடையிலேயே தங்கி வந்தார். இதையடுத்து முத்தரசி உறவினர்களின் ஆதரவோடு தனியாக வசித்து வந்தார்.

பரத் சரக்கு வாகன டிரைவராக வேலை செய்ததால், அடிக்கடி தாராபுரத்திலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு, ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வந்து செல்வது வழக்கம். சந்தையில் காய்கறிகளை இறக்கிவிட்டு, பரத் கேத்தம்பட்டியில் உள்ள முத்தரசியின் வீட்டிற்குச் சென்று, அங்கு அவரை பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழரசி கடந்த மே மாதம் முத்தரசியை செல்போனில் தொடர்பு கொண்டபோது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்ந்து சில நாட்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், தமிழரசி தனது தங்கையை காண கேத்தம்பட்டிக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால், அவரை பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். எங்கு தேடியும் முத்தரசி கிடைக்கவில்லை. இதனால் கவலையடைந்த தமிழரசி, வேடசந்தூர் போலீசில் முத்தரசியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்தரசி பயன்படுத்திய செல்போனை வைத்து அவரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், அவருடைய காதலன் பரத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரத் தனது பெற்றோரின் விருப்பத்தின்படி, தாராபுரம் அருகே உள்ள வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி பரத்திற்கு கடந்த மே மாதம் 15-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே பரத் தன்னை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவது முத்தரசிக்கு தெரியவந்தது. அதனால் அவர் பரத்தை தேடி ஆத்துக்கால்புதூருக்கு சென்றார். அங்கு பரத்தை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கதறி அழுதார். அதற்கு பரத் சம்மதிக்காததால், போலீசில் புகார் அளிப்பேன் என்று முத்தரசி மிரட்டியதாக தெரிகிறது.

இதை சற்றும் எதிர்பார்க்காத பரத், முத்தரசியிடம் கனிவாக பேசி அவரை சமாதானப்படுத்தினார். பிறகு உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு, வா உன்னை காரில் கேத்தம்பட்டிக்கு அழைத்து சென்று, உன் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி, முத்தரசியை காரில் ஏற்றிக்கொண்டு, அருகே உள்ள நல்லதங்காள் தடுப்பணைக்கு அழைத்து சென்றார். அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் இருவரும் அமர்ந்து வெகுநேரம் திருமணம் குறித்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த பரத் தனது காதலி முத்தரசியை அடித்து கொன்றார்.

அதன் பிறகு பரத் தனது காதலியின் உடலை காரில் ஏற்றிக்கொண்டார். அவருடைய பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்தார். அதன் பிறகு அவருடைய பெற்றோர் பரத்தை சந்தித்து முத்தரசி உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். யாருக்கும் தெரியாத வகையில், முத்தரசியின் உடலை வீட்டில் வைத்திருந்து, இரவானதும் வீட்டின் பின்பக்கம் இருந்த, காலியிடத்தில், குழியை தோண்டி புதைத்தனர். அதன் பிறகு பரத்தின் தாயார் வட்சுமிக்கு, வீட்டில் தனியாக இருக்கும் போது, முத்தரசி உடலை புதைத்த ஞாபகம் வந்ததால் பயத்தில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து பரத்தின் குடும்பத்தினர் முத்தரசியின் உடலை தோண்டி எடுத்து எரித்துவிட முடிவு செய்தனர். அதன்படி முத்தரசியின் உடலை தோண்டி எடுத்து எரித்துவிட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. பரத் கொடுத்த தகவலின் பேரில் முத்தரசியின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக, பரத்தின் தாயார் லட்சுமி, பரத்தின் குடும்ப நண்பர் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கடந்த 2-ந் தேதி, வேடசந்தூர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் மருத்துவ குழுவினர் ஆகியோர் பரத் கொடுத்த தகவலின் அடிப்படையில், முத்துலட்சுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய, அந்த இடத்தை தோண்டிப்பார்த்தனர். ஆனால் அங்கு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு இந்த வழக்கில் தலைமறைவான பரத்தின் தந்தை கனகராஜ், மாமன் மணி என்கிற சுப்பிரமணி, மற்றும் அவரது உறவினரான மடத்துக்குளம், ரெட்டிபாளையத்தை சேர்ந்த குமாரசாமி ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பரத்தின் தந்தை கனகராஜும், பரத்தின் மாமன் சுப்பிரமணியும் திருப்பூர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இருவரும் சேர்ந்துதான் முத்தரசியின் உடலை தோண்டி எடுத்து எரித்ததை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து போலீசார் கனகராஜையும், சுப்பிரமணியத்தையும் நேற்று பலத்த பாதுகாப்புடன் ஆத்துக்கால்புதூருக்கு அழைத்து சென்றனர். அவர்களுடன் தாராபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன், கோவை அரசு மருத்துவமனை தடயவியல் மருத்துவ பரிசோதனை குழுவினர், மற்றும் தடயவியல் துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.

கனகராஜும், சுப்பிரமணியும் பரத்தின் வீட்டிற்கு பின்புறம் குளியல் அறையின் அருகே மறைவாக இருந்த ஒரு இடத்தை அடையாளம் காட்டினார்கள். அதன் பிறகு அந்த இடத்தை, போலீசார் ஆட்களை கொண்டு தோண்டிப்பார்த்தனர். அதில் சிறிதளவு தலைமுடி, எலும்பு போன்ற சில பொருட்கள், சாம்பல் உள்ளிட்டவைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

போலீசார் அவைகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்புவதற்காக எடுத்து சென்றனர்.

Next Story