கூடலூர், பந்தலூரில் கொட்டும் மழையிலும் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் - சம்பளத்துடன் விடுமுறை வழங்க கோரிக்கை


கூடலூர், பந்தலூரில் கொட்டும் மழையிலும் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் - சம்பளத்துடன் விடுமுறை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2019 10:30 PM GMT (Updated: 9 Aug 2019 7:41 PM GMT)

பந்தலூரில் கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கின்றனர். எனவே சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர், 

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால், வாகன போக்குவரத்து தடைபட்டு உள்ளது. மேலும் பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்து உள்ளதால், அங்கு வசித்து வந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று 5-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அவர்கள் தேயிலை தோட்டங்களையொட்டிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்று கூடலூர் அருகே உள்ள கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்த கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.

இதேபோல கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயிருக்கு பாதுகாப்பு இன்றி மழையால் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து கூடலூர் பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

பலத்த மழை நிலச்சரிவை ஏற்படுத்துகிறது. ஆனால் நாங்கள் உயிருக்கு பாதுகாப்பு இன்றி பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறோம். வேலைக்கு வந்தால் மட்டுமே சம்பளம் உண்டு. வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி கொட்டும் மழையிலும் பணியாற்றுகிறோம். மழை பெய்வதால் பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் சம்பளம் இன்றி வீட்டில் இருக்க முடியாது. வேலைக்கு வந்து தான் ஆக வேண்டும். எனவே அதிகாரிகள் எங்களது நிலமையை கருத்தில் கொண்டு பலத்த மழையின்போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story