பாளையங்கோட்டையில் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்
பாளையங்கோட்டையில் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சியை கலெக்டர் ஷில்பா நேற்று திறந்து வைத்தார்.
நெல்லை,
மத்திய, மாநில அரசுகள் ஊரக கைவினை கலைஞர்கள் மற்றும் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவி செய்யும் வகையில் தேசிய அளவில் ‘சாரஸ்’ கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை நேருஜி மைதானத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
கண்காட்சியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் 9 மாநிலங்கள் மற்றும் 29 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள், கைத்தறி சேலைகள், வீட்டு அலங்கார பொருட்கள், எம்ப்ராய்டரி பொருட்கள், சுடுமண் பொருட்கள், கற்றாழை நார், பனை ஓலை உற்பத்தி பொருட்கள், அலங்கார சணல் பைகள், பெண்களுக்கான செயற்கை ஆபரணங்கள், கைப்பைகள், சிறுவர் விளையாட்டு பொருட்கள், மூலிகை மருந்துகள், இயற்கை உணவு வகைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் பொது மக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை பொது மக்கள் இலவசமாக பார்த்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன் அடையுமாறு கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 140 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்களை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
Related Tags :
Next Story