தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர்கள் மறியல் போராட்டம் - 349 பேர் கைது
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி வழங்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 349 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரியும், பணி செய்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியை தாமதமின்றி உடனுக்குடன் முழுமையாக வழங்கக்கோரியும் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரகண்டநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் விழுப்புரம் அருகே ஆயந்தூரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேரும், மணலூர்பேட்டையில் தாலுகா தலைவர் பால்ராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 75 பேரும், டி.அத்திப்பாக்கத்தில் தாலுகா கமிட்டி உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 349 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story