பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 55 பேர் கைது


பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 55 பேர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2019 10:15 PM GMT (Updated: 9 Aug 2019 8:16 PM GMT)

பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

பெரம்பலூர்,

மாநில சுயாட்சிக்கு எதிரான சட்டத்திருத்தங்களையும், அரசின் வெளிப்படை தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் ஆர்.டி.ஐ. சட்ட திருத்தங்களையும் மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று மாலை வடக்கு மாதவியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவர் முகமது ரபீக், மாநில செயற்குழு உறுப்பினர் சபியுல்லா ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போராட்டக்காரர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனால், அதனையும் மீறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதமாகி தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாக செல்ல முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 55 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story