பாடியநல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் தற்கொலை முன்னதாக ‘வாட்ஸ்-அப்’பில் தாய்க்கு தகவல் அனுப்பினார்


பாடியநல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் தற்கொலை முன்னதாக ‘வாட்ஸ்-அப்’பில் தாய்க்கு தகவல் அனுப்பினார்
x
தினத்தந்தி 10 Aug 2019 3:45 AM IST (Updated: 10 Aug 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

தனது தாய்க்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் அனுப்பிவிட்டு பாடியநல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சுபாஷ்(வயது 27). இவர், சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை சுபாஷ், சுங்கச்சாவடி அலுவலகத்தில் உள்ள அறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசார், சுபாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக சுபாஷ், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ‘வாட்ஸ்-அப்’பில் தனது தாயாருக்கு தகவல் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Next Story