சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்


சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு மருத்துவ  கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2019 11:00 PM GMT (Updated: 9 Aug 2019 8:56 PM GMT)

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிராட்வே,

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:-

தேசிய மருத்துவ ஆணைய மசோதா அமைந்தால் கிராமப்புறங்களில் முறையாக மருத்துவம் நடைபெறாது. காரணம் மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு ஒன்றை வைத்துள்ளார்கள். இதனால் மாணவர்களின் கவனம் நெக்ஸ்ட் தேர்வை நோக்கியே இருக்கும். இதனால் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி திறன் வளராத நிலை ஏற்படும். செய்முறை பயிற்சி திறன் இல்லாமல் வெறும் தேர்வை மட்டும் எழுதி தேர்வாகும் மாணவர்களால் சிறந்த மருத்துவம் அளிக்க முடியாது.

இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை வரும். இந்தியா வில் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் உள்ளனர். எனவே அவர் களுக்கு சிறந்த மருத்துவம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story