சென்னை, மதுரை, கோவையில் மின்சார பஸ்கள் விரைவில் இயக்கம் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் தகவல்
சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, நெல்லை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் வெளியிட்ட புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்ட புதிய அறிவிப்புகளை விரைந்து நடைமுறைப்படுத்துதல் போன்றவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பணிமனைகள் மேம்படுத்துதல்
கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் நமது அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் மேம்படுத்திட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில், கடந்த 2½ ஆண்டுகளில் ரூ.1,160 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 881 புதிய பேருந்துகள், போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.
இப்பேருந்துகளில் குளிர்சாதன வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட தற்போதைய கால கட்டத்திற்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பேருந்துகள் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படு கிறது. இதனை நல்லமுறையில் பராமரித்து வருவாயினைப் பெருக்கிட வேண்டும்.
தற்போது வடிவமைக்கப்படும் புதிய மாநகர பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலியுடனே பஸ்சில் ஏறி பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மின்சார பஸ்கள்
நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பஸ்கள் இயக்குவதற்கான விரிவான திட்டமானது ‘சி-40’ என்கிற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பல கட்டங்களாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.
போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் களைந்திட ஆவண செய்ய வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளில் பணியாளர்களின் குறைகளை கேட்கிற நாளாக தேர்வு செய்ய வேண்டும். அந்த நாளில் தலைமையிடம் மற்றும் பணிமனைகளில் அவர்களுடைய கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை உடனுக்குடன் சரி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story