கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி 2 குழந்தைகள் கொலை: பெண் தற்கொலை முயற்சி


கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில்,  தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி 2 குழந்தைகள் கொலை: பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 9 Aug 2019 9:52 PM GMT (Updated: 9 Aug 2019 9:52 PM GMT)

பெங்களூரு அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொம்மசந்திராவை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி முனிரத்னம்மா. இந்த தம்பதிக்கு 7 வயதில் சந்தன் என்ற மகனும், 5 வயதில் யுவராணி என்ற மகளும் இருந்தார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல, நேற்று முன்தினமும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. பின்னர் வீட்டில் இருந்து முனிராஜ் வெளியே புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த முனிரத்னம்மா தனது குழந்தைகள் சந்தன் மற்றும் யுவராணியை வீட்டு முன்பாக உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தள்ளியதாக தெரிகிறது. இதனால் 2 குழந்தைகளும் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்கள். பின்னர் முனிரத்னம்மாவும் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. ஆனால் தொட்டிக்குள் குறைந்த அளவே தண்ணீர் இருந்துள்ளது. இதனால் தொட்டிக்குள் இருந்து அவர் மேலே வந்துள்ளார்.

அதன்பிறகு, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்வதற்கு முனிரத்னம்மா முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து முனிரத்னம்மாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தற்கொலைக்கு முயன்ற முனிரத்னம்மாவை அவர்கள் காப்பாற்றியதுடன் சர்ஜாபுரா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சந்தன், யுவராணியின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் 2 குழந்தைகளையும் தொட்டிக்குள் தள்ளி கொலை செய்ததாகவும், தானும் தற்கொலைக்கு முயன்ற போது, அக்கம் பக்கத்தினர் தன்னை காப்பாற்றி விட்டதாகவும் முனிரத்னம்மா கூறினார். அதைத்தொடர்ந்து, 2 குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சர்ஜாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜ் மற்றும் முனிரத்னம்மாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story