தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி


தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Aug 2019 4:46 AM IST (Updated: 10 Aug 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

மும்பை,

மும்பை மஜித் மந்திர் நாகதேவி கிராஸ் லைன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கடந்த 3-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை இடித்து தள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று இந்த பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் 5 தொழிலாளிகள் சிக்கி கொண்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த 5 பேரையும் மீட்டனர்.

இவர்களில் 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தலையில் படுகாயம் அடைந்த பார்ஹித் கான் (வயது45), அப்துல் சேக் (24) ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு டாக்டர்கள் பரி சோதித்து விட்டு பார்ஹித் கான் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்துல் சேக்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story