பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பாத நிலையில், கேரள ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பாத நிலையில் கேரள ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே நல்லாறில் அணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் சோலையார், பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் முழுகொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வீணாக ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆனால் அதன்பிறகு பெய்ய வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்தது. குடிநீருக்கு போதிய தண்ணீர் வழங்காத முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து இருந்தும் நிரம்பவில்லை. இதற்கிடையில் மேல்நீராறு, கீழ்நீராறு பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கன மழையால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கீழ்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கேரளாவுக்கு செல்லும் இடைமலை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே நல்லாறில் அணை கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:-
மேல்நீராறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, சர்க்கார்பதி வழியாக காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்ல 150 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய உள்ளது. பி.ஏ.பி. ஒப்பந்தப்படி மேல்நீராறு தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு சொந்தம் என்பதால், அங்கு கிடைக்கும் தண்ணீர் முழுவதையும் 14.40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கபாதை அமைத்து நல்லாறுக்கு தண்ணீர் கொண்டு வர முடியும். நல்லாறில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் காண்டூர் கால்வாய் அமைத்தால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.
நல்லாறில் அணை கட்டினால் ஆண்டுதோறும் 9 டி.எம்.சி. தண்ணீரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லலாம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருமூர்த்தி பாசன விவசாயிகள் எந்தவித பாதிப்பு இல்லாமல் 4 லட்சம் ஏக்கர் முழுமையாக பாசனம் செய்ய முடியும். மேலும் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடியும். ஆனால் நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு உள்ளனர்.
மேல்நீராறில் இருந்து சுரங்கபாதை வழியாக வினாடிக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல முடியும். இதேபோன்று கீழ்நீராறு அணையில் இருந்தும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தான் சோலையாறுக்கு கொண்டு செல்ல முடியும். தற்போது பெய்து வரும் கன மழையால் மேல்நீராறு, கீழ்நீராறு அணைகள் நிரம்பி விட்டன. இதனால் இரு அணைகளையும் சேர்த்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் போக, மீதமுள்ள தண்ணீர் கேரளாவுக்கு செல்லும் இடைமலை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. அதன்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக செல்கிறது.
இதே நல்லாறில் அணை கட்டி இருந்தால் அந்த தண்ணீரை வீணாகமல் திருமூர்த்தி அணைக்கு கொண்டு சென்று இருக்கலாம். தற்போது பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பாத நிலையில் தண்ணீர் வீணாக ஆற்றில் செல்வது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 26-ந்தேதி தமிழக-கேரள இருமாநில முதல்-அமைச்சர்கள் நல்லாறில் அணை கட்டுவது தொடர்பாக பேச உள்ளதாக தெரிகிறது. எனவே கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்லாறு அணை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் விவசாயிகள் கஷ்டத்தில் இருந்து மீள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story