நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில், காட்டெருமைகளால் விளை பயிர்கள் நாசம் - கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு


நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில், காட்டெருமைகளால் விளை பயிர்கள் நாசம் - கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 11 Aug 2019 3:30 AM IST (Updated: 10 Aug 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் காட்டெருமைகளால் விளை பயிர்கள் நாசம் அடைவதாக கிராமமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

நத்தம் தாலுகா ஆவிச்சிபட்டி கிராம மக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆவிச்சிபட்டியில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் மலை உள்ளது. இந்த மலையில் காட்டெருமைகள் அதிக அளவில் இருக்கின்றன. தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டெருமைகள் மலையில் இருந்து வெளியேறுகின்றன.

அவ்வாறு வெளியேறும் காட்டெருமைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றனர். மேலும் விளை பயிர்கள், மாமரங்களை நாசம் செய்கின்றன. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் நாங்கள், தினமும் இழப்பை சந்தித்து வருகிறோம். மேலும் இரவு நேரங்களிலும் நிம்மதியாக வெளியே நடமாட முடியவில்லை. காட்டெருமைகள் முட்டி விடுமோ? என்ற அச்சத்தில் வசித்து வருகிறோம்.

எனவே, காட்டெருமைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடாமல் தடுக்க வேலி அமைக்க வேண்டும். அதோடு வனப்பகுதியில் காட்டெருமைகளுக்கு ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். அதேபோல் அங்குள்ள ஓடையின் இருபக்கங் களிலும் மாந்தோப்புகள் உள்ளன. மாந்தோப்புகளில் மாங்காய் ஏற்றுவதற்கு சரக்கு வாகனங்களை கொண்டு செல்ல பாதை இல்லை.

மேலும் ஓடை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் ஓடை வழியாகவும் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக மாங்காய்களை தலைச்சுமையாக கொண்டு வரும் நிலை உள்ளது. எனவே, சிறிய சரக்கு வாகனங்கள் செல்வதற்கு வசதியாக ஓடையை அகலப்படுத்தி தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story