கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆள் கடத்தல், கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புக்கு தனிக்குழு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆள் கடத்தல், கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புக்கு தனிக்குழு
x
தினத்தந்தி 10 Aug 2019 10:00 PM GMT (Updated: 10 Aug 2019 6:55 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆள் கடத்தல், கொத்தடிமை தொழில் முறை ஒழிப்புக்கு என தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு தொடர்பாக பயிலரங்க நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது. இந்த முறையை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் தனி குழு அமைக்கவும், அந்த குழுவில் வக்கீல்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் என பல்வேறு துறையினர் இணைந்து செயல்படும் வகையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆள் கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு குழு அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி மீனா சதீஷ் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் பி.கணேசன், லோக் அதாலத் தலைவர் அறிவொளி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பை சேர்ந்த சாலமன் ஆண்டனி, ராஜா மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் பி.கணேசன் கூறுகையில், கொத்தடிமை ஒழிப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தற்போது ஆள் கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில் முறையை ஒழிப்பதற்கு என்று மாவட்ட அளவில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆள் கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில் முறையை ஒழிக்க நாங்கள் தொடர்ந்து இந்த குழுவுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story