1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்


1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:30 PM GMT (Updated: 10 Aug 2019 7:02 PM GMT)

திருமங்கலம், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நடந்த விழாவில் 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள விடத்தகுளம் மற்றும் கள்ளிக்குடியில் வருவாய்த்துறை சார்பில் 671 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, நீலகிரியில் பெய்து வரும் கனமழை பாதிப்பிற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூரில் நூலிழையில் தி.மு.க. வெற்றி பெற்றது. அது நிரந்தரம் அல்ல. அ.தி.மு.க.வினர் தேர்தலை மையமாக வைத்து மக்களுக்கு பணியாற்றவில்லை. மக்களுக்கு சேவை செய்வது தான் நோக்கம். தமிழகத்தில் உள்ள ஏழை மக்களும், முதல்-அமைச்சரை எளிதான முறையில் சந்திக்க முடியும் என்றார். பின்னர் கள்ளிக்குடி கிராமத்தில் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

இதேபோல் டி.கல்லுப்பட்டியில் நடந்த விழாவில் முதியோர் உதவித்தொகை, மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவி, வீட்டுமனை பட்டா, நுண்ணீர் பாசன திட்டம் உள்பட பல்வேறு துறைகள் மூலமாக 450 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் குறைவான இடத்தில் அதிகமான மரக்கன்றுகளை வைத்து காடுகள் உருவாக்கும் திட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்து அங்கு மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ராஜசேகர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆக மொத்தம் 3 இடங்களிலும் சேர்த்து ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

Next Story