மணல்மேடு அருகே இடிந்து விழும் நிலையில் பாலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மணல்மேடு அருகே இடிந்து விழும் நிலையில் பாலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2019 10:30 PM GMT (Updated: 10 Aug 2019 7:05 PM GMT)

பாலம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்துள்ளது. மேலும் பாலத்தின் இருபுறமும் இருக்கும் கான்கிரீட் தடுப்புச்சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

மணல்மேடு,

மணல்மேடு அருகே கிழாய் ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து பிரிந்து பெரியார் நகர், காந்திஜி நகர், வெள்ளாளர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையின் இடையே சிறு பாலம் உள்ளது. இந்த பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள சாலையை தான் மேற்கண்ட பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்துள்ளது. மேலும் பாலத்தின் இருபுறமும் இருக்கும் கான்கிரீட் தடுப்புச்சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாக வாகனங்களில் செல்லும்போது சேதமடைந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுமோ? என்று வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.

இந்த பாலம், அங்கு செல்லும் வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது, பாலம் மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story