வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே, மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவவீரர் தற்கொலை


வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே, மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவவீரர் தற்கொலை
x
தினத்தந்தி 11 Aug 2019 4:15 AM IST (Updated: 11 Aug 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் இருந்து ராணுவவீரர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி கண்முன்னே நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்,

வேலூரை அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே.நகரை சேர்ந்த சுந்தரேசன் மகன் மகேஷ்குமார் (வயது 32). இவர், அசாம் மாநிலத்தில் ராணுவவீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகள் புவனேஸ்வரிக்கும் (25) கடந்த மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது. புவனேஸ்வரி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவனும் மனைவியும் நேற்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்துவாச்சாரி நோக்கி வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மகேஷ்குமார் மோட்டார் சைக்கிளை வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் சாலையோரம் நிறுத்தினார். தொடர்ந்து கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி சத்தமாக பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென மகேஷ்குமார் மேம்பால சுவரின் மீது ஏறி நின்று கீழே குதித்தார். அவர் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அணுகுசாலையில் தலைகீழாக வந்து விழுந்தார். இதில், மகேஷ்குமாரின் தலை பிளந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.

கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கணவர் துடிதுடிப்பதை கண்டு மேம்பாலத்தில் நின்றபடி புவனேஸ்வரி கதறி அழுதார். மேம்பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புவனேஸ்வரி ஆட்டோவில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் செல்லும் வழியில் மயக்கமானார். இதையடுத்து புவனேஷ்வரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஷ்வரியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘மகேஷ்குமார் ராணுவத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை சுந்தரேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து மகேஷ்குமாருக்கும், உறவினர் பெண் புவனேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்காக மகேஷ்குமார் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். மகேஷ்குமாருக்கும்-புவனேஷ்வரிக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் தான் மகேஷ்குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது புவனேஷ்வரிக்கு தெரிய வந்துள்ளது. அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினையால் விரக்தியடைந்த மகேஷ்குமார் ‘இருவரும் உயிரோடு இருக்க வேண்டாம். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறி நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு புவனேஷ்வரியை அழைத்து சென்றார். ஆனால் அங்கு செல்ல புவனேஷ்வரி மறுத்து கணவரை சமாதானப்படுத்தி சத்துவாச்சாரி நோக்கி அழைத்து வந்தார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே வந்த போது மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மகேஷ்குமார் கூறி உள்ளார். அதனை புவனேஷ்வரி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்’ என புவனேஷ்வரி தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

திருமணமான ஒரே மாதத்தில் மனைவி கண்முன்னே மேம்பாலத்தில் இருந்து ராணுவவீரர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story