கணவர் பிரிந்து சென்றதால் விரக்தி: தம்பியிடம் வீடியோ காலில் பேசிய பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ.விசாரணை


கணவர் பிரிந்து சென்றதால் விரக்தி: தம்பியிடம் வீடியோ காலில் பேசிய பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ.விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2019 5:30 AM IST (Updated: 11 Aug 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

கணவர் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த பெண் தம்பியிடம் வீடியோ காலில் பேசி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

நல்லூர்,

திருப்பூர் சந்தராபுரம் என்.பி.நகர் செல்லும் வழியில் உள்ள மாராப்பகவுண்டர் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களது மூத்த மகள் அனிதா(வயது 28). இளைய மகன் அசோக்(22). அனிதா பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

இந்த நிலையில் அனிதாவிற்கும் கோவை ஒத்தக்கால் மண்டபம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(32) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கோவையில் சில மாதங்கள் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவர் குடும்பத்தினரிடம் அனிதாவுக்கு திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து அனிதா கணவருடன் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன் திருப்பூர், சந்தராபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அருகில் அனிதா கணவருடன் குடியேறினார். தனி குடித்தனம் வந்த சில நாட்களிலேயே கணேசனுக்கும், அனிதாவிற்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் கோபித்து கொண்டு கணேசன் கோவைக்கு சென்று விட்டார். கணவரை பிரிந்ததால் அனிதா மிகுந்த கவலையுடன் காணப்பட்டார். பின்னர் அவர் தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் தான் தங்கி இருந்த அறைக்குள் சென்று கதவை உட்புறமாக அனிதா பூட்டி கொண்டார். பின்னர் அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தெரியாமல் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருப்பதால் மகள் படித்து கொண்டு இருக்கிறார் என கருதிய அவரது தாய் சரஸ்வதி வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருந்தார்.

இதற்கிடையே தூக்குப்போடுவதற்கு முன்பு தனது தம்பி அசோக்கிற்கு அனிதா வீடியோ காலில் போன் செய்து பேசி இருக்கிறார். அப்போது தம்பி உன்னை பார்க்கணும் போல் இருக்கிறது என்று அழுது கொண்டே கூறி இருக்கிறார். திடீரென்று அக்காள் வீடியோ காலில் போன் செய்து அழுது கொண்டே தன்னை பார்க்க வேண்டும் என்று கூறியதை அறிந்து அசோக் அதிர்ச்சி அடைந்தான். வீடியோ காலில் அக்காளிடம் பேசி கொண்டு இருக்கும் போதே அறைக்குள் மின்விசிறியில் துப்பட்டா தொங்குவதை பார்த்து வெலவெலத்து போனான். அக்காளிடம் நைசாக பேசி போனை அணைத்தான்.

உடனே அசோக் பதறியடித்து கொண்டு தனது தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்தார். தான் வெளியில் இருப்பதாகவும், அக்காள் அழுது கொண்டே போன் செய்ததாகவும், மின்விசிறியில் துப்பட்டா தொங்குவதாகவும், எனக்கு பயமாக இருக்கு. உடனே வீட்டுக்கு போய் பாருங்கள் என்று கூறி இருக்கிறார்.

இதையடுத்து வெளியே சென்றிருந்த ஈஸ்வரமூர்த்தி பதறி அடித்து கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த சரஸ்வதி ஏன் பதறி அடித்து கொண்டு ஓடி வருகிறீர்கள் என்று கேட்டார். அனிதா எங்கே? என்று கேட்டவாறே வீட்டுக்குள் ஓடி வந்த அவர் அனிதா இருந்த அறை கதவை தட்டினார்.

ஏதோ விபரீதம் நடந்து விட்டதாக கருதிய சரஸ்வதி பதற்றத்தில் அனிதா, அனிதா என சத்தம் போட்டார். கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் அனிதா தொங்கி கொண்டு இருந்தார். உடனே தூக்கில் இருந்து இறங்கிய அனிதாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அனிதாவுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. செண்பகவள்ளி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினார்.

Next Story