மருத்துவ நிறுவனங்கள் மாசு கட்டுப்பாடு வாரிய அங்கீகாரம் பெறாவிட்டால் நடவடிக்கை - மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி அறிவிப்பு


மருத்துவ நிறுவனங்கள் மாசு கட்டுப்பாடு வாரிய அங்கீகாரம் பெறாவிட்டால் நடவடிக்கை - மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 4:30 AM IST (Updated: 11 Aug 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மாசு கட்டுப்பாடு வாரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதியின்படி மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மாசு கட்டுப்பாடு வாரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மருத்துவ கழிவு மேலாண்மை விதிப்படி அங்கீகாரத்தையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் காலாவதி இல்லாத அங்கீகாரத்தையும் பெற வேண்டும்.

இந்த விதி அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள், கால்நடை மருத்துவமனைகள், விலங்கிணங்களின் சோதனை கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.

மேலும் புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை பிறப்பித்த உத்தரவின்படி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை இணங்க தவறியவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Next Story