மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:45 PM GMT (Updated: 10 Aug 2019 8:00 PM GMT)

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ்-1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வங்கி கணக்கில் செலுத்தப்படும்

இந்த உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதனுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்கள் http://ww.bcmcmw.tn.gov.in/welf schemes.minorities.htm என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://minorityaffairs.gov.in/schmes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story