கோவை மாவட்டத்தில் கனமழை: வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன; போக்குவரத்து துண்டிப்பு


கோவை மாவட்டத்தில் கனமழை: வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன; போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2019 10:00 PM GMT (Updated: 10 Aug 2019 8:17 PM GMT)

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நொய்யல் ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 6-வது நாளான நேற்று, காலையில் லேசாக வெயில் எட்டிப்பார்த்தது. எனினும் அவ்வப்போது லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள மலையடிவார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் 6-வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்த நொய்யல் ஆற்றில் உள்ள சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூருக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக வெள்ளலூர் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

கோவை அருகே உள்ள கோவை குற்றால அருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் நேற்று 6-வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியிலும் கனமழை பெய்ததால் அங்குள்ள பெரும்பதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த ஆற்றில் இதுவரை தடுப்பணை கட்டாததால் அந்த தண்ணீர் அனைத்தும் கேரளாவுக்கு வீணாக செல்கிறது.

அதுபோன்று வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சோமந்துறை சித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. எனவே அங்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆழியாறு பகுதியில் பெய்த மழையால் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் மின்வாரிய குடியிருப்பு மற்றும் மலைவாழ் கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஆழியாறு அணை அருகே உள்ள குரங்கு அருவியில் தொடர்ந்து 4-வது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக குரங்கு அருவிக்கு செல்ல சுற்றலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்ந்து 140 அடியை தாண்டியது. வால்பாறை- பொள்ளாச்சி ரேர்டில் காண்டூர் கால்வாய் பகுதி, அட்டகட்டி, சோலைகுறுக்கு உள்பட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

அதுபோன்று மண்சரிவு ஏற்பட்டு பாறைகளும் ரோட்டில் விழுந்தன. இதனால் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாறைகளை அகற்றும் பணி நடந்து வருவதால் நேற்று காலையில் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ்கள் எதுவும் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து உள்ளனர்.

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் ரோட்டில் மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் அங்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அதை சரிசெய்யும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

Next Story