மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது தாய்-சேய் மரணம்; உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்


மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது தாய்-சேய் மரணம்; உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 11 Aug 2019 5:15 AM IST (Updated: 11 Aug 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பிரசவத்தின்போது தாயும் சேயும் மரணமடைந்ததால் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் சின்ன அம்மணங்குப்பத்தை சேர்ந்தவர் வேலு (வயது 32). டிரைவர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 24).

பாக்கியலட்சுமி கர்ப்பமடைந்ததை தொடர்ந்து கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதித்துவந்தார். பின்னர் புதுவை எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக ஆலோசனைகளை பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி அவர் பிரசவத்துக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக குழந்தையும் இறந்துள்ளது. ஆனால் இந்த விபரத்தை வேலு மற்றும் அவரது மாமியாரான சகுந்தலா ஆகியோரிடம் சொல்லவில்லையாம். பாக்கியலட்சுமியின் உடலை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற பின்னரே தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வேலு மற்றும் சகுந்தலா ஆகியோர் அழுது புரண்டனர். இதுகுறித்த தகவல் அவர்களது உறவினர்களுக்கு தெரியவந்ததும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

உரிய முறையில் பிரசவம் பார்க்காததால்தான் பாக்கியலட்சுமி இறந்ததாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகளின் அமைப்பு செயலாளர் அமுதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், இந்திய கம்யூனிஸ்டு சுப்பையா ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி முரளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பிரேத பரிசோதனை நடத்தி சிகிச்சையில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story