கோவை மாவட்டத்தில் கனமழை: வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்


கோவை மாவட்டத்தில் கனமழை: வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 11 Aug 2019 3:15 AM IST (Updated: 11 Aug 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

மேட்டுப்பாளையம், 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக பவானி ஆற்றில் 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள சாமண்ணாநகர், குஞ்சான்தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீடுகளில் வசித்தவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று மேட்டுப்பாளையம் வந்தார். பவானி ஆற்றுப்பாலம் அருகே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்வையிட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை ஆவடி பேரிடர் மீட்பு உதவி கமாண்டண்ட் கவில்பிரேம் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோரிடம் பாதுகாப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்னர் தங்கப்பா திருமண மண்டபத்திற்கு சென்றார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப்பொருட்களை வழங்கினார். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கோட்ட வருவாய் அதிகாரி சுரேஷ், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், தாசில்தார் சாந்தாமணி, தனிதாசில்தார் சந்திரன், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, நகராட்சி ஆணையர் காந்திராஜ், மாவட்ட பேரவை செயலாளர் நாசர், நகர செயலாளர் வான்மதிசேட், ஆவின் பால் இயக்குனர் பி.டி.கந்தசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

கோவை மாவட்டம் முழுவதும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரத்து 700 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கபட்டுள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரத்தில் வசித்து வரும் மக்களின் வீடுகளில், மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.25 கோடி செலவில் 350 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பட்டணம் பகுதியில் உள்ள தரைப்பாலம், சிங்காநல்லூர் வெள்ளலூர் இடையிலான தரைப்பாலம் மற்றும் சூலூர் அருகே உள்ள ராவத்தூர் தரைப்பாலம் ஆகியவை சேதமடைந்தன.

இதைத்தொடர்ந்து ராவத்தூரில் கனமழையால் சேதமடைந்த நொய்யல் ஆற்றுப் பாலத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் மழை வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நொய்யல் ஆற்றில் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எல்லா வாய்கால்களும் குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் குளங்களில் அதிகமான தண்ணீர் நிரம்பி வருகிறது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தாலும் குளங்களுக்கு செல்லும் பாதை சிறியது என்பதால் குளங்கள் மெதுவாக நிரம்பி வருகின்றன. செங்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அது சரி செய்யப்பட்டது. கோவையில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிறைந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மக்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என்று பொதுமக்களே கருதினால் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வந்துவிட வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 92 வீடுகள் சேதமடைந்துள்ளன. 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப் பாலத்தை உயர் மட்ட பாலமாக மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது. சிங்காநல்லூர் வெள்ளலூர் இடையிலான பாலம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடப்பதால் கோவையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என்பது தவறான கருத்து. கோவையில் குளக்கரைகளில் 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தோப்பு கா.அசோகன், முன்னாள் சூலூர் ஒன்றிய செயலாளர் லிங்குசாமி, நகர செயலாளர் இருகூர் ஆனந்த குமார், முன்னாள் பள்ளப்பாளையம் பேரூராட்சி தலைவர் வி.கே. சண்முகம் கண்ணம்பாளையம் அங்கமுத்து, சூலூர் ஒன்றிய துணை செயலாளர் ஏ.பி. அங்கண்ணன், ராசிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, முத்துகவுண்டபுதூர் ஊராட்சி செயலாளர் வி.பி.கந்தவேல் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story