அரவக்குறிச்சியில் உரிமையியல் நீதிமன்றம் திறப்பு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்பு


அரவக்குறிச்சியில் உரிமையியல் நீதிமன்றம் திறப்பு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Aug 2019 11:00 PM GMT (Updated: 10 Aug 2019 8:31 PM GMT)

அரவக்குறிச்சியில் புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்றனர்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் புதிதாக உரிமையியல் நீதிமன்றம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து புதிய நீதிமன்றத்தை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா திறந்து வைத்தார். மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சரவணன், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடந்த விழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் அரவக்குறிச்சியில் புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். 1990-ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து கரூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே, அரவக்குறிச்சிக்கு தனி நீதிமன்றம் தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அந்த நீண்டநாள் கோரிக்கையினை தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் தற்போது நிறைவேற்றி வைத்திருக்கின்றது. இந்த நீதிமன்றம் இப்பகுதியில் அமைவதால், வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும், கரூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்திற்கும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கும் சென்று வரும் நேரம் இனி மிச்சமாகும். நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்க வாய்ப்பாக இருக்கும்.

வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்

கரூரில் உள்ள மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்து 281 சிவில் வழக்குகளும், கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து 207 சிவில் வழக்குகளும் என மொத்தம் 488 வழக்குகளும், நடுவர் நீதிமன்றத்தில் இருந்து 593 குற்றவியல் வழக்குகள் இந்த புதிய நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகின்றது. மேலும், நீதிபதி சசிகலா கரூர் நீதிமன்றத்தில் இருந்து, அரவக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அரவக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நோட்டு புத்தகங்கள்

தொடர்ந்து மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் மாரப்பன், வழக்கறிஞர் சங்கத்தலைவர் சீனிவாசன், கரூர் மாவட்ட நீதிபதிகள், பார்கவுன்சில் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் வரவேற்றார். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி கோபிநாத் நன்றியுரையாற்றினார்.

Next Story