சங்ககிரி அருகே கன்டெய்னர் லாரி-பஸ் மோதல்; 2 பேர் பலி - 20 பேர் படுகாயம்


சங்ககிரி அருகே கன்டெய்னர் லாரி-பஸ் மோதல்; 2 பேர் பலி - 20 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Aug 2019 11:00 PM GMT (Updated: 10 Aug 2019 8:46 PM GMT)

சங்ககிரி அருகே கன்டெய்னர் லாரி-பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

சங்ககிரி,

கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அதே போல சேலத்தில் இருந்து கோவை நோக்கி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இதனை செங்கல்பட்டு அருகே உள்ள பெரும்பாக்கம் செய்யாறு பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மங்கரங்கன்பாளையம் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. மேலும் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதிய லாரி மறுபுறம் உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றது. அந்த நேரம் அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி டிரைவரான லோகநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதே போல பஸ்சில் பயணம் செய்த தர்மபுரி ஆர்.எஸ். சாலையை சேர்ந்த நவீன்குமார் (43) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், பஸ் டிரைவர் ரமேஷ், பஸ்சில் பயணம் செய்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இந்திரா (52) ஆகியோர் உள்பட பயணிகள் 20 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் குமாரபாளையம், சேலம் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் விபத்துக் குள்ளான கன்டெய்னர் லாரி-பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்ககிரி அருகே கன்டெய்னர் லாரி-பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story