குமரி மாவட்டத்தில் தொடர் மழை: சிற்றார்-1 அணைப்பகுதியில் 6½ செ.மீ. பதிவு 90 குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது


குமரி மாவட்டத்தில் தொடர் மழை: சிற்றார்-1 அணைப்பகுதியில் 6½ செ.மீ. பதிவு 90 குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது
x
தினத்தந்தி 11 Aug 2019 4:30 AM IST (Updated: 11 Aug 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. சிற்றார்-1 அணைப்பகுதியில் 6½ செ.மீ. மழை பதிவானது. மழையால் 90 குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரையும் நீடித்தது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த மழையால் குமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) கீழ் மொத்தம் 2040 பாசனக்குளங்கள் உள்ளன. அவற்றில் 90 குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. 459 குளங்கள் 25 சதவீதம் தண்ணீருடனும், 687 குளங்கள் 50 சதவீதம் தண்ணீருடனும், 349 குளங்கள் 70 சதவீதம் தண்ணீருடனும், 212 குளங்கள் 80 சதவீதம் தண்ணீருடனும், 140 குளங்கள் 90 சதவீதம் தண்ணீருடனும், 74 குளங்கள் 99 சதவீதம் தண்ணீருடனும் உள்ளன. 29 குளங்களில் குறைவான தண்ணீரே உள்ளன.

ஆனந்தக் குளியல்

பழையாற்றில் ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையான சபரி அணையில், ஊட்டுவாழ்மடம் பகுதியில் அமைந்துள்ள குமரி தடுப்பணை, சுசீந்திரம் பகுதியில் உள்ள சோழன்திட்டை தடுப்பணை ஆகியவற்றில் மழைவெள்ளம் மறுகால் பாய்ந்தோடுகிறது. இந்த தண்ணீரில் சிறுவர்கள் ஆனந்தக்குளியல் போட்டனர். நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

6½ செ.மீ. மழை

பேச்சிப்பாறை- 44.2, பெருஞ்சாணி- 39.2, சிற்றார் 1- 66.6, சிற்றார் 2- 52, பொய்கை- 10.4, மாம்பழத்துறையாறு- 42, புத்தன் அணை- 38, முக்கடல்- 34.4, பூதப்பாண்டி- 17.4, களியல்- 38.4, கன்னிமார்- 14.2, கொட்டாரம்- 40, குழித்துறை- 66, மயிலாடி- 38, நாகர்கோவில்- 35.2, சுருளக்கோடு- 38.6, தக்கலை- 21, குளச்சல்- 18, இரணியல்- 16.4, பாலமோர்- 31.6, ஆரல்வாய்மொழி- 10.4, கோழிப்போர்விளை- 55, அடையாமடை-48, குருந்தங்கோடு- 31, முள்ளங்கினாவிளை- 55, ஆனைக்கிடங்கு- 49.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக சிற்றார்-1 அணைப்பகுதியில் 66.6 மி.மீ. அதாவது 6½ செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

இந்த மழையினால் அணைகளுக்கு தண்ணீர் தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினத்தை காட்டிலும் நேற்று தண்ணீர் வரத்தின் அளவு சிறிது குறைந்திருந்தது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1702 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 1557 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 122 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 201 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 4 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 36 கன அடி தண்ணீரும் வந்தது. மாம்பழத்துறையாறு அணையில் இருந்து மட்டும் 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மற்ற அணைகள் மூடப்பட்டுள்ளன.

வீடு இடிந்தது

நேற்று முன்தினம் 11.60 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.10 அடி உயர்ந்து 13.70 அடியாக இருந்தது. 45.30 அடியாக இருந்த பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 3.35 அடி உயர்ந்து 48.65 அடியானது. நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் மைனஸ் 19.30 அடியாக இருந்தது. நேற்று காலை இந்த அணையின் நீர்மட்டம் மைனஸ் அளவில் இருந்து பிளஸ் இரண்டு அடியாக உயர்ந்தது. இதேபோல் சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.18 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 9.28 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 7.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.24 அடியாக உயர்ந்துள்ளன.

நேற்றைய நிலவரப்படி அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும், ஒரு மரம் சாய்ந்து விழுந்ததாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது.

Next Story