குறிஞ்சிப்பாடியில் புத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


குறிஞ்சிப்பாடியில் புத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:15 PM GMT (Updated: 10 Aug 2019 9:19 PM GMT)

குறிஞ்சிப்பாடியில் புத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வந்தது. மேலும் இரவில் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் செடல் திருவிழா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். தேர் நிலையை வந்தடைந்ததும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துலிங்கம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story