சுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை


சுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
x
தினத்தந்தி 11 Aug 2019 3:49 AM IST (Updated: 11 Aug 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள் என்று பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் ஏராளமான போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டுகள் தமிழரசன், பலராமன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடனும், மோப்ப நாய் உதவியுடனும் ரெயில் நிலைய பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.

இதுதவிர ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாளங்களையும் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.


Next Story