குன்றத்தூரில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை 4 பேர் கைது


குன்றத்தூரில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2019 11:15 PM GMT (Updated: 11 Aug 2019 4:27 PM GMT)

குன்றத்தூரில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் அருள் (வயது 24). சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அருளை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியது. பலத்த காயங்களுடன் தப்பி ஓடிய அருள் அவரது வீட்டில் சென்றார்.

இதை கண்டதும் பதறிப்போன அவரது பெற்றோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள் சென்று பரிசோதித்து பார்த்து விட்டு அருள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அருள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (24), வெங்கட்ராமன் (30), விஜய் (24), சதீஷ்குமார் (28), ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமுடிவாக்கம் பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்த்துவிட்டு வந்தபோது அருள் தரப்புக்கும், அதே பகுதியை சேர்ந்த டில்லிபாபு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அருள் தரப்பினர் தாக்கியதால் நிஷாந்த் தரப்பினருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அருள் உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அருள் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே அருள், நிஷாந்த் தரப்பினரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த நிஷாந்த் தரப்பினர் அருளை தீர்த்துக்கட்ட முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து வரும்போது கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நிஷாந்த் , வெங்கட்ராமன், விஜய், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள டில்லிபாபுவை தேடி வருகின்றனர்.

Next Story