மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய், ஊருணிகள் தூர்வாரும் பணி


மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய், ஊருணிகள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 5:05 PM GMT)

மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் கண்மாய், ஊருணிகள் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன.

மானாமதுரை,

மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.54 கோடி மதிப்பீட்டில் 300 பாசன கண்மாய்கள், ஊருணிகள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மானாமதுரை ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் குடிமராமத்து திட்டப்பணியை நாகராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், சின்னகண்ணனூர் வேலுச்சாமி, சோமத்தூர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருப்புவனம் ஒன்றியத்தில் 45 கிராம ஊராட்சிகளில் உள்ள ஊருணி, குளங்கள், கண்மாய்களை குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. அதன்படி திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள குளங்கள், ஊருணிகளும், கழுகேர்கடை, காஞ்சிரங்குளம், எஸ்.வாகைக்குளம் ஆகிய 3 ஊராட்சிகளில் உள்ள பெரிய கண்மாய்களும் கணக்கிடப்பட்டது. பின்னர் ஊருணி மற்றும் குளத்திற்கு தலா ரூ.1 லட்சம் எனவும், கண்மாய்களுக்கு தலா ரூ.5 லட்சம் என்று மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணியை மண்டல அலுவலர் ரெங்கசாமி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் ஒன்றிய ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெடுமரம் மற்றும் கண்டவராயன்பட்டி ஊராட்சி பகுதியில் குடிமராமத்து பணிகள் தொடங்கின. இதனை திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலரும், சிவகங்கை உதவி இயக்குனருமான விஜயநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஆணையாளர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) பர்னபாஸ் அந்தோணி, உதவி பொறியாளர்கள் மலர்விழி, பெரியசாமி மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Next Story