பண்ருட்டி அருகே துணிகரம், போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்ம மனிதர்கள் கைவரிசை


பண்ருட்டி அருகே துணிகரம், போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்ம மனிதர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 12 Aug 2019 4:30 AM IST (Updated: 11 Aug 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு மகன் சதா சிவம். இவர் சென்னையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். பாலு தனது குடும்பத்தினருடன், தனது மகன் சதாசிவத்தை பார்த்து வருவதற்காக கடந்த 9-ந்தேதி சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை பாலு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த 2 பீரோக்களின் கதவு திறந்த நிலையில் அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும், பீரோவில் இருந்த 3½ பவுன் நகை, ரூ.1½ லட்சம், மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான பட்டு புடவைகள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 3¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலு, புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் ஏட்டுவின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story