ரூ.17½ கோடியில் குடிமராமத்து பணிகள் - அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்


ரூ.17½ கோடியில் குடிமராமத்து பணிகள் - அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2019 11:00 PM GMT (Updated: 11 Aug 2019 5:50 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் ரூ.17½ கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற இருப்பதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் அருகே ராமாபுரம் ஊராட்சியில் முனீஸ்வரன் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.5 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் அனைத்து ஊரக பகுதிகளில் உள்ள சிறுபாசன ஏரிகள், குளங்கள், மதகுகள், கலுங்கு, வரத்து வாய்க்கால்கள், மீள் கட்டுமானப் பணிகள் மற்றும் ஊரணிகளின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில், அவற்றை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

இதன்படி 2019-20-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 80 சிறுபாசன ஏரிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டிலும், 1,363 குளங்கள், ஊரணிகள் ரூ.13 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 80 பெரிய குளங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு குளத்துக்கும் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி, தூர்வாரப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்கப் படும்.

கடலூர் மாவட்டத்தில் 7 தடுப்பணைகள் ரூ.106.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தொலைநோக்கு பார்வையாக ரூ.302 கோடியில் 8 முக்கிய பணிகள் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது கடலூர் ஊராட்சி ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சி முனீஸ்வரன் ஏரி முழுமையாக தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும்.

இதனால் இப்பகுதியில் சுற்றியுள்ள கிணறு, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் ஆதார அமைப்புகளில் நீரின் அளவு அதிகரித்து ஆண்டு முழுவதும் பயன்படுத்திட முடியும். இப்பணிகள் யாவும் மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும். மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீரை வீராணம் ஏரியில் கூடுதலாக சேமிப்பது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் இதற்கான பதில் தெரியும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) செந்தில்நாதன், தாசில்தார் செல்வகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் காசிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் வைத்திலிங்கம், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, தேவநாதன், விஜயராயலு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story