நகையை பறிக்க முயன்று பெண்ணை கத்தியால் கீறிய வாலிபர் கைது


நகையை பறிக்க முயன்று பெண்ணை கத்தியால் கீறிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2019 4:15 AM IST (Updated: 12 Aug 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதத்தில் இரவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் நகையை பறிக்க முயன்று உடலில் கத்தியால் கீறிய மீனவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

திருப்புல்லாணி அருகே உள்ளது குத்துக்கல்வலசை. இந்த ஊரைச்சேர்ந்தவர் நாகசாமி. மீனவர். இவரின் மனைவி பஞ்சவர்ணம்(வயது55). கடந்த 4-ந் தேதி நாகசாமி மீன்பிடி தொழிலுக்காக ராமேசுவரம் சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத வேளையில் பஞ்சவர்ணம் காற்றுக்காக வெளியில் படுத்திருந்தார். அப்போது அங்கு முகத்தினை சாக்கால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் பஞ்சவர்ணம் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு ஓட முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்துக்கொண்டு பஞ்சவர்ணம் நகையை இறுக பிடித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தன் கையில் வைத்திருந்த கத்தியால் பஞ்சவர்ணத்தை சரமாரியாக உடலில் கீறிவிட்டு அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் பஞ்சவர்ணத்தின் மருமகனுக்கும் அதேபகுதியை சேர்ந்த உறவினரான மீனவர் கோவிந்தராஜ்(30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு பஞ்சவர்ணம்தான் காரணம் என்று கோவிந்தராஜ் பஞ்சவர்ணம் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இதன்காரணமாக நாகசாமி மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளதை அறிந்து பழிவாங்க வீட்டிற்கு வந்து நகையை பறிக்க முயன்றதோடு, கத்தியால் கீறியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தொண்டி அருகே மீமிசலில் தங்கியிருந்த கோவிந்தராஜை திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து கைது செய்தார்.

Next Story