நம்பியூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது; முதியவர் உடல் கருகி சாவு


நம்பியூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது; முதியவர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 12 Aug 2019 4:15 AM IST (Updated: 12 Aug 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் உடல் கருகி செத்தார்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 85). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் மண்எண்ணெய் விளக்கை பொருத்தி வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். நேற்று காலை 6 மணி அளவில் அந்த பகுதியில் காற்று வீசியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பண்ணனின் வீட்டில் தொங்கி கொண்டிருந்த மண்எண்ணெய் விளக்கு கீழே விழுந்து உள்ளது. இதன்காரணமாக ஓலையில் தீப்பற்றியது. பின்னர் இந்த தீ மளமளவென குடிசை வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

வீடு தீப்பிடித்து எரிந்ததை கண்டதும் தன்னை காப்பாற்றும்படி கருப்பண்ணன் கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. மேலும் வயது முதுமை காரணமாக கருப்பண்ணனால் வீட்டை விட்டு வெளியே வரவும் முடியவில்லை. உடனே இதுபற்றி அங்குள்ளவர்கள் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் குடிசை வீடு எரிந்து அவர் மீது விழுந்து அமுக்கியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அந்த பகுதியை சேர்ந்தவர்களே தீயை அணைத்துவிட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்பண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story