ஆரணியில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ரூ.58½ லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு


ஆரணியில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ரூ.58½ லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 6:57 PM GMT)

ஆரணியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ரூ.58½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலசபாக்கத்தில் நடந்த நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய 2 நீதிமன்றங்கள் திறப்பு விழா திருவண்ணாமலை மற்றும் கலசபாக்கத்தில் நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திருமகள் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தில் நீதித்துறையின் வளர்ச்சியும் அவற்றிற்கான அடிப்படை வளர்ச்சிகளையும் பல்வேறு வகையில் மேம்பாடு செய்து வருகிறார்கள்.

இந்த புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து மக்களுக்கும் நடுநிலையான நீதி வழங்குவது என்பது ஒரு நாட்டின் தலையாய கடமைகளுள் ஒன்றாக தொன்றுதொட்டே கருதப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி குடிமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.

தமிழகத்தில் நீதித்துறையின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டு தகுந்த சூழ்நிலை அமைவதற்கு அரசு மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாநகர உரிமையியல் நீதிமன்றங்கள், சிறு வழக்குகள் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் என மொத்தம் 1,149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. தற்போது இந்த 2 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் 14-வது நிதிக்குழு பரிந்துரைப்படி மாநில அரசின் நிதியில் இருந்து ரூ.58 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு நீதித்துறை செவ்வனே செயல்படத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் என அனைத்து வசதிகளையும் தொடர்ந்து செயல்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், கே.வி.சேகரன், அரசு கூடுதல் வக்கீல்கள் எழில்மாறன், நீதிபதிகள், திருவண்ணாமலை மற்றும் போளூர் பார் அசோசியேஷன் தலைவர்கள், திருவண்ணாமலை வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி சங்கர் நன்றி கூறினார்.

Next Story