சேதுபாவாசத்திரம் பகுதியில் சூறைக்காற்று: 2500 நாட்டுப்படகுகள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


சேதுபாவாசத்திரம் பகுதியில் சூறைக்காற்று: 2500 நாட்டுப்படகுகள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 7:29 PM GMT)

சேதுபாவாசத்திரம் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் 2500 நாட்டுப்படகுகள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் நாட்டுபடகுகள் உள்ளன, இவை அனைத்தும் விசை படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடிய திங்கள், புதன், சனிகிழமைகளை தவிர்த்து மற்ற தினங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. மேலும் கடல் அலை 4 அடி முதல் 6 அடி உயரத்திற்கு எழுந்தது. இதனால் 4 ஆயிரம் நாட்டுப்படகுகளும் கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க செல்வில்லை.

மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த நிலையில் நேற்று காற்றின் வேகம் சற்று குறைந்ததால் சுமார் 1,500 நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. ஆனால் ஆழ்க்கடல் மீன்பிடி தொழில் செய்யக்கூடிய சுமார் 2500 நாட்டுப்படகுகள் 4-வது நாளாக நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அந்தந்ந கிராமங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Story