காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 5:15 AM IST (Updated: 12 Aug 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகம், கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 2.50 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து படிப்படியாக அதி கரிக்க தொடங்கியது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மதியம் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி வந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மெயின் அருவி தெரியாதபடி தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

மேலும் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக-கர்நாடக எல்லையான பிலுகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஒகேனக்கல்லுக்கு சென்று நீர்வரத்தை பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் போலீசாரிடம் கேட்டறிந்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கூறுகையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும். ஒகேனக்கல்லில் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் பொதுமக் களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

Next Story