போலீஸ் எனக்கூறி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவர் கைது


போலீஸ் எனக்கூறி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 7:56 PM GMT)

சில மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து தான் போலீஸ் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.

கீழப்பழுவூர்,

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சசிகுமார்(வயது 27). இவர் கடந்த சில மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து தான் போலீஸ் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர், கிராம மக்கள் சிலரை அணுகி தான் சென்னையில் போலீசாக வேலை பார்த்து வருவதாகவும், தனது அண்ணன் சுங்கத்துறையில் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார். தன்னிடம் பணம் கொடுத்தால் எல்.இ.டி. டி.வி, குளிர்சாதன பெட்டி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பாதி விலையில் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதை உண்மை என்று நம்பிய அப்பகுதியை சேர்ந்த 4 பேர் தனித்தனியாக ரூ.47 ஆயிரம், ரூ.85 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என அவரிடம் கொடுத்தனர். அதை வாங்கிக்கொண்ட சசிகுமார் தான் சென்னை சென்ற பிறகு உங்களை தொடர்பு கொண்டு பொருட்களை அனுப்பி வைக்கிறேன் எனக்கூறி அறையை காலி செய்துவிட்டு சென்று விட்டார்.

அவர் சென்று 4 நாட்களுக்கு மேலாகியும் சசிகுமாரை தொடர்பு கொள்ள முடியாததால் பணத்தை கொடுத்த 4 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் சசிகுமாரை கைது செய்தனர். அவரிடம் பணமோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story