திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 8:11 PM GMT)

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருமயம்,

திருமயத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப் படித்தார்கள் சார்பில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 8-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

தேரோட்டம்

இதையொட்டி சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள், ஆண்டாள் ஆகியோர் திருத்தேருக்கு எழுந்தருளினர். பின்னர் மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தீர்த்தவாரி

பின்னர் சுவாமிகளை தேரில் இருந்து இறக்கி, பல்லக்கில் தூக்கி புஷ் கரணி குளத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டன. தேரோட்டத்தில் ரகுபதி எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், இயக்குனர் அன்பு, அறக்கட்டளை துணைத் தலைவர் கருப்பையா, இணை செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் திருமயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மேற்பார்வையாளர் ராஜேந்திரன், திருமெய்யர் அறக்கட்டளை தலைவர் சொக்கலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story