நாங்குநேரியில் ஒரே நாள் நள்ளிரவில் துணிகரம்: வங்கி ஊழியர் உள்பட 2 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு


நாங்குநேரியில் ஒரே நாள் நள்ளிரவில் துணிகரம்: வங்கி ஊழியர் உள்பட 2 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 3:15 AM IST (Updated: 12 Aug 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் நேற்று முன்தினம் ஒரே நாள் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வங்கி ஊழியர் உள்பட 2 பெண்களிடம் மர்ம நபர் 10 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். மெக்கானிக். இவருடைய மனைவி சிவசங்கரி(வயது50). நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சிவசங்கரி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் அவர்களது வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சிவசங்கரி கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துள்ளார். இதில் திடுக்கிட்டு விழித்த சிவசங்கரி கூச்சலிட்டார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் உள்ளிட்டோரும் விழித்து கொண்டு மர்ம நபரை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த நபர் வேகமாக இருளில் ஓடி தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பக்கத்து தெருவான பெருந்தெருவில் உள்ள பாண்டித்துரை என்பவரது வீட்டிற்குள் மர்ம நபர் புகுந்துள்ளார். அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாண்டித்துரை மகள் ஷர்மிளா(25) கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை அந்த நபர் பறித்துள்ளார். இதில் திடுக்கிட்டு கண் விழித்த ஷர்மிளா மர்ம நபரை பிடிக்க முயற்சித்துள்ளார். அந்த நபர் வேகமாக வீட்டிலிருந்து வெளியே ஓடியுள்ளார். ஷர்மிளா கூச்சலிட்டவாறு பின்தொடர்ந்து ஓட, வீட்டில் இருந்தவர்களும் மர்ம நபரை துரத்தி உள்ளனர். அதற்குள் மர்ம நபர் வேகமாக இருளில் ஓடி தப்பி சென்று விட்டார்.

நகையை பறிகொடுத்த ஷர்மிளா ஒரு தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த நிலையில் அவரிடம் மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.

இந்த 2 சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்துள்ளன. ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த தெருக்களில் மர்ம நபர் பூட்டியிருந்த வீடுகளை நைசாக திறந்து உள்ளே சென்று கைவரிசை காட்டியுள்ளார். இந்த சம்பவங்கள் நாங்குநேரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நகைகளை பறிகொடுத்த 2 பெண்களும் கொடுத்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,‘ அந்த பகுதியை நன்கு அறிந்த நபர் தான் துணிகரமாக பூட்டியிருந்த வீடுகளை நைசாக திறந்து உள்ளே சென்று தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளார். இதில் முன்னாள் வழிப்பறி திருடர்களில் ஒருவர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அந்த கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story