அரசியலில் அங்கீகாரம் வழங்காவிட்டால் தேர்தலில் போட்டியிடுவோம் தேசிய செட்டியார் பேரவை அறிவிப்பு


அரசியலில் அங்கீகாரம் வழங்காவிட்டால் தேர்தலில் போட்டியிடுவோம் தேசிய செட்டியார் பேரவை அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 10:15 PM GMT (Updated: 11 Aug 2019 8:44 PM GMT)

அரசியலில் அங்கீகாரம் வழங்காவிட்டால் தேர்தலில் போட்டியிடுவோம் என தேசிய செட்டியார்கள் பேரவை அறிவித்தது.

திருச்சி,

தேசிய செட்டியார்கள் பேரவையின் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு வாணிப செட்டியார் பேரவை நிர்வாகி பன்னீர்செல்வம், செட்டியார் வர்த்தக கழக அமைப்பாளர் பாலாஜி மற்றும் வாணிப செட்டியார், நகரத்தார், தெலுங்கு செட்டியார் என 50 பிரிவுகளாக உள்ள செட்டியார்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 2 கோடியே 50 லட்சம் செட்டியார் சமூகத்தினர் உள்ளனர். ஆனால், இதுவரை செட்டியார் சமூகத்தினருக்கு அரசியலிலும், அரசுத்துறைகளிலும் பிரதிநிதித்துவம் அளிக்க வில்லை. எங்கள் பேரவையின் மாநாடு அடுத்த ஆண்டு(2020) சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். செட்டியார் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர், பிரதமர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.

தேர்தலில் அங்கீகாரம்

தமிழகத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 1 லட்சம் செட்டியார்கள் வசித்து வருகிறார்கள். ஆனால், அரசியலில் உரிய அங்கீகாரம் இதுவரை வழங்கப்பட வில்லை. அரசியலில் அங்கீகாரம் வழங்காவிட்டால் தேர்தலில் போட்டியிடுவோம். 200 சட்டமன்ற தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவோம்.

மேலும் செட்டியார் சமூக வளர்ச்சிக்காக ‘செட்டியார்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற 24-ந் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் ‘இளம் தொழில் முனைவோர் உள்ளரங்கு மாநாடு-2019’ என்ற பெயரில் நடக்கிறது.

கண்ணகிக்கு 300 அடி உயர சிலை

தேனி லோயர்கேம்ப் மற்றும் பூம்புகாரில் கற்புக்கரசி கண்ணகிக்கு 300 அடி உயர சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம்-கேரள மாநில எல்லையில் வரன்முறை செய்யப்படாத இடத்தில் கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது. எனவே, எல்லை வரன்முறை செய்து தமிழகத்திற்கு என அதை நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story