மராட்டியத்தில் வெள்ள பாதிப்பை அமித் ஷா பார்வையிட்டார்


மராட்டியத்தில் வெள்ள பாதிப்பை அமித் ஷா பார்வையிட்டார்
x
தினத்தந்தி 11 Aug 2019 11:30 PM GMT (Updated: 11 Aug 2019 9:58 PM GMT)

மராட்டியத்தில் வெள்ள பாதிப்பை விமானத்தில் பறந்தபடி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பார்வையிட்டார்.

புனே,

மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களை கனமழை புரட்டி எடுத்தது. வரலாறு காணாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழையால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. பல அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி நிலைகுலைந்து உள்ளன. இரு மாவட்டங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நகர்புறங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவுக்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது. முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மின்சார சேவையும் தடைப்பட்டு இருக்கிறது.

இதனால் மக்கள் ஒரு வாரமாக பரிதவித்து வருகின்றனர். அங்கு கனமழைக்கு இதுவரை 30 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பரிதவித்த 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு குழுவினரால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து படகுகள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை படையினர், கடற்படை, கடலோர காவல் படை, ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்து உள்ள இடங்களில் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டு உள்ளதை அடுத்து மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து உள்ளனர்.

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் வேண்டுகோளை அடுத்து, கர்நாடகத்தில் உள்ள அல்மாட்டி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது.

இந்தநிலையில், நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் வெள்ளபாதிப்புகளை விமானத்தில் பறந்தபடி வான்வழியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவரிடம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் வெள்ள பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலவரம் பற்றி எடுத்துரைத்தார்.

நேற்று நடத்திய ஆய்வு குறித்து அமித்‌ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கர்நாடகம் (பெலகாவி), மராட்டிய மாநிலத்தில் (கோலாப்பூர், சாங்கிலி) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வானத்தில் விமானத்தில் பறந்து ஆய்வு செய்தேன். நிவாரண பணிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

க‌‌ஷ்டத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிகள் செய்ய மத்திய-மாநில அரசுகள் முழுமையான அளவில் உறுதி பூண்டுள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story