வால்பாறையில், கரடி கடித்து காவலாளி சாவு - உடலை எடுக்க விடாமல் போராட்டம்


வால்பாறையில், கரடி கடித்து காவலாளி சாவு - உடலை எடுக்க விடாமல் போராட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 10:26 PM GMT)

வால்பாறையில் கரடி கடித்து காவலாளி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை எடுக்கவிடாமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54), காவலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அய்யர்பாடி எஸ்டேட் 2-வது பிரிவு பகுதியில் உள்ள எஸ்டேட் நிர்வாகத்தின் தொழில் நல்லுறவு மேலாளர் வீட்டிற்கு காவல் பணிக்கு சென்றார். நேற்று காலை 6.30 மணிக்கு பணிமுடிந்து அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு தேயிலைத்தோட்டம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று சுப்பிரமணியை தாக்கி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் தனது கணவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், சுப்பிரமணியின் மனைவி தேவகி அவரை தேடி சென்றார். அப்போது தேயிலைத்தோட்டத்திற்கு நடுவே சுப்பிரமணி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்டேட் நிர்வாகத்தினர், வால்பாறை வனத்துறையினர் மற்றும் வால்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கரடி கடித்து சுப்பிரமணி இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அங்கு திரண்டிருந்த எஸ்டேட் தொழிலாளர்கள், காவலாளியின் உடலை அங்கிருந்து எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இப்பகுதியில் நடமாடி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இறந்த காவலாளியின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தொழிலாளர்களிடம் தாசில்தார் வெங்கடாசலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து காவலாளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனை கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. தலைமையில், தாசில்தார் வெங்கடாசலம், பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார், அ.தி.மு.க. நகர கழக செயலாளர் மயில்கணேசன், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவூதீன் ஆகியோர் சுப்பிரமணியின் மனைவி தேவகியிடம் வழங்கினார்கள். கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. சுப்பிரமணியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, தனது சார்பாக ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Next Story