வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க பரவனாற்றில் அருவா மூக்கு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - கலெக்டர் தகவல்


வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க பரவனாற்றில் அருவா மூக்கு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 10:26 PM GMT)

பரவனாற்று வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து வருவதை தடுக்க அருவா மூக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று குடி மராமத்து பணிகள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 36 பணிகள் ரூ.8 கோடியே 15 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 405 கிலோ மீட்டர் தூரம் பாசன வாய்க்கால், வடிகால், வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அரசே செய்யாமல் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து குழுக்கள் அமைத்து செய்யப்படுகிறது. விவசாயிகளே நேரடியாக இந்த பணிகளை செய்வதால் எவ்வித விமர்சனமும் வராது.

இதில் 50 சதவீதம் முடிவடைந்து விட்டது. மீதியுள்ள பணிகளும் மழைக்காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளை மாநில அளவில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு, பணியின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்பி உள்ளனர்.

இது தவிர தமிழ்நாடு ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சிறு ஏரிகள், குளம், குட்டைகளை தூர்வார முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இதன்படி கடலூர் மாவட்டத்தில் 80 சிறு பாசன ஏரிகள், 1,363 குளம், குட்டைகளை தூர்வார உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மக்கள் இயக்கமாக செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏரி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால், அது பற்றி அளவீடு செய்து, நடவு கல் நட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றித்தரப்படும். அதன்பிறகு தூர்வாரும் பணி நடைபெறும். இந்த பணிகள் இந்த மாதத்துக்குள் முடிக்கப்படும். கடலூர் தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டம். இதை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் தொலைநோக்கு திட்டமாக வெள்ள தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. 150 கோடி ரூபாய் செலவில் கெடிலம், பரவனாறு, பழைய கொள்ளிடம் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. 7 தடுப்பணைகள் கட்டும் பணிகள் 102 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.

தமிழக அரசுக்கு ரூ.302 கோடியில் 8 பணிகளை கண்டறிந்து அனுப்பினோம். இதன்படி மழைக்காலத்தில் பரவனாற்றில் வரும் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து வருவதை தடுக்க அருவா மூக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதிய கால்வாய் வெட்டி வெள்ள நீரை மாற்று பாதை வழியாக கடலுக்குள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஆதிவராகநல்லூர் வெள்ளாற்றில் தடுப்பணை, பழைய கொள்ளிடம் ஆற்றில் கீழகுண்டலபாடி, அகரநல்லூர், ராதாவிளாகம் ஆகிய இடங்களில் தடுப்பணை உள்பட 8 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது.

இது பற்றி முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறோம். இந்த பணிகளுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கி தரப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது. ஆகவே இந்த பணிகளை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம். இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் இனி கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றங்களால் பாதிக்காது. கிடைக்கும் நீரை சேகரித்து நிலத்தடி நீரை சேமித்து வைக்கவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

Next Story