மாவட்ட செய்திகள்

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்க சமரச தீர்வு மையத்தை அணுகலாம் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு + "||" + Access to Compromise Settlement Center to avoid litigation in courts

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்க சமரச தீர்வு மையத்தை அணுகலாம் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்க சமரச தீர்வு மையத்தை அணுகலாம் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்க மடைவதை தவிர்க்க சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு பெறலாம் என்று பெரம்பலூரில் நடந்த நீதிமன்றங்களின் திறப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி ரவிச்சந்திரபாபு பேசினார்.
பெரம்பலூர்,

பெரம்பலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம்-எண் 2 மற்றும் வேப்பந்தட்டையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துடன் இணைந்த குற்றவியல் நீதிமன்ற தொடக்க விழா தனலட்சுமி சீனிவாசன் ஓட்டல் வளாகத்தில் உள்ள மகாலில் நேற்று நடந்தது. விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி லிங்கேஸ்வரன் வரவேற்றார். இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொத்தானை அமுக்கி இரு நீதிமன்றங்களையும் திறந்துவைத்தனர். விழாவில் நீதிபதி ரவிச்சந்திரபாபு பேசியதாவது:-


ஒரு வழக்கிற்கு நீதிபதியும், வழக்கறிஞரும் நாணயம் போல இருக்கவேண்டும். இருபக்கமும் சரியாக இருந்தால் தான் தீர்ப்புகள் சிறந்ததாக இருக்கும். பெயரில் மட்டும் நாணயமாக இருக்காமல், நடத்தையிலும் நாணயமாக இருக்கவேண்டும். மற்ற பணிகளை விட வழக்கறிஞர் தொழிலை மட்டுமே ஓய்வு காலம் என்ற வரையறையின்றி சுதந்திரமாக செயல்பட முடியும். யாருக்கும் அடிமையில்லை. எவருக்கும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை. நீதிபதிகள் சிறந்த தீர்ப்புகளை எழுத வேண்டும். இதில் வழக்கறிஞர்களின் வாதிடல் பணிஉதவி மிகமுக்கியம். தற்போது 100 வழக்குகளுக்கு தீர்வு செய்யப்படும் அதே நேரத்தில் ஆயிரம் வழக்குகள் கூடுதலாக தாக்கல் செய்யப் படுகின்றன.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது. வழக்குகள் குறையும் போது, நீதிமன்றங்கள் பெருகுவதும் குறையும். வழக்குகள் நீதிமன்றங்களில் தேக்கமடைவதை தவிர்க்க சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு பெறவேண்டும். விட்டுக்கொடுப்பதன் மூலம் வழக்குகளை வெகுவாக தவிர்க்கமுடியும். குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை வயதில் மூத்தவர்களை அணுகி தீர்வு காணவேண்டும். முடிந்தால் நீதிமன்றங்களை நாடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி பேசியதாவது:-

நீதிமன்ற தீர்ப்புகள் மற்ற தீர்ப்புகளுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழவேண்டும். சிறந்த தீர்ப்பு அமைய வழக்கறிஞர்கள் தங்களது வாதத்திறமையுடன் வாதிடவேண்டும். வழக்கிற்கு தேவையான தகவல்களை திரட்டிட நூலக வசதியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அப்போது தான், பொதுமக்களின் உரிமையை நிலை நாட்டும் வகையில் நியாயமான தீர்ப்பு அமையும். வழக்குகளை ஒத்திவைப்பது, நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்வதை தவிர்க்கவேண்டும். சமரச தீர்வு மூலம் தீர்வு காணும் வகையிலான சாத்தியக் கூறுகளை உருவாக்க வேண்டும். மாற்றுமுறை தீர்வு மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி கிரி நன்றி கூறினார்.