பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 5:00 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல் களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.

பெரம்பலூர்,

முஸ்லிம்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து உறவினர்கள், நண்பர்கள், ஏழை, எளியவர்கள் என பாகுபாடு இன்றி அனைவருக்கும் இறைச்சியை பகிர்ந்தளிப்பது வழக்கம். ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒன்று முதல் பல எண்ணிக்கையில் ஆடுகளை இறைவனுக்கு குர்பானி கொடுத்து இந்த பண்டிகையினை கொண்டாடுகின்றனர்.

அதன்படி பெரம்பலூரில் மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதனை முன்னிட்டு முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல் நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் டவுன் பள்ளிவாசல் இமாம் சல்மான்ஹஜ்ரத் சிறப்பு தொழுகையை முன்னின்று நடத்தி வைத்தார். நூர் பள்ளிவாசல் முஸ்தபா ஹஜரத், குர்ஆன் வசனமான குத்பா ஓதி தொழுகையை தொடங்கிவைத்தார். இந்த தொழுகையில் டவுன் பள்ளிவாசல் நாட்டாமை முனவர் ஷெரீப் சாகேப், உலமாசபை மாவட்ட தலைவர் முகம்மது முனீர், மதரசா நிர்வாகி காஜாமொய்தீன், மதரசா சத்தார், மருத்துவ அலுவலர் டாக்டர் ஹூசைன், இஸ்லாமிய தன்னார்வலர் அப்துல்லா உள்பட திரளான முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய சிறுவர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். பிறகு முஸ்லிம்கள் குர்பானி கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் டவுன் பள்ளி வாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வழிபாடு நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் வடக்குமாதவி சாலையில் உள்ள மக்கா, நூர்பள்ளி வாசல்கள், பாரதிதாசன் நகரில் உள்ள பள்ளி வாசல், ஆலம்பாடி சாலையில் உள்ள கலிபா பள்ளிவாசல் ஆகியவற்றில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லெப்பைக்குடிகாடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விஸ்வக்குடி, முகம்மதுபட்டிணம், வி.களத்தூர், வாலிகண்டபுரம், தேவையூர், பாடாலூர், து.களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

Next Story