மாதவரத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.4 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது


மாதவரத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.4 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 5:50 PM GMT)

மாதவரத்தில், வீட்டில் பதுக்கிய ரூ.4 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

செங்குன்றம்,

வெளிநாடுகளில் இருந்து சிகரெட் பாக்கெட்டுகளை விமானம் மூலம் கடத்திவந்து, சென்னை மாதவரம் தெலுங்கு காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குறிப்பிட்ட அந்த வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர்.

அதில், அந்த வீட்டில் பண்டல் பண்டலாக வெளிநாட்டு சிகரெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 57), ரவி (47), கர்ணன் (23), ரமேஷ் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீனா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து சிகரெட் பாக்கெட்டுகளை விமானம் மூலம் கடத்திவந்து, இந்த வீட்டில் பதுக்கி வைத்து இங்கிருந்து சென்னை பர்மா பஜாரில் விற்பனை செய்ய இருந்தது தெரிந்தது.

இதையடுத்து வீட்டில் பதுக்கிய ரூ.4 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கைதான 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story