நீர்வரத்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு, வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல் - வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது


நீர்வரத்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு, வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல் - வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 13 Aug 2019 4:45 AM IST (Updated: 13 Aug 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பென்னாகரம்,

கர்நாடகம், கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 2½ லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2.40 லட்சம் கனஅடியும், 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 2.50 லட்சம் கனஅடியும், மதியம் 3 மணி நிலவரப்படி வினாடிக்கு 2.65 லட்சம் கனஅடி தண்ணீரும் வந்தது. தொடர்ந்து இரவு 7 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 4 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் ஓடுவதால் நுழைவுவாயிலை பூட்டி சீல் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் கரையோரம் தாழ்வான பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தொங்கு பாலத்தை சூழ்ந்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த பாலம் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் போக்குவரத்து தடைப்பட்டது. ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய கிராமங்களில் வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக-கர்நாடக எல்லையான பிலுகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து வருகிறார்கள். ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு படை வீரர்கள், மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். நாகமரை, நெருப்பூர், பூச்சூர் மற்றும் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தண்டோரா போட்டு அறிவுறுத்தி வருகின்றனர். 

Next Story