மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + "||" + For those affected by rain floods Rs.10 crore Relief Fund

நீலகிரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மண்சரிவு, சாலை துண்டிப்பு போன்றவை ஏற்பட்டது. மேலும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். நீலகிரியில் பெய்த பலத்த மழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டத்தில் நடுவட்டம், கூடலூர், பந்தலூர், அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் இரவில் ஊட்டியில் ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார்.

இந்த நிலையில் நேற்று ஊட்டி அருகே குருத்துக்குளி கிராமத்தில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த விமலா, சுசிலா ஆகிய இருவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் நிவாரண தொகையை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து கப்பத்தொரை, எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டார்.

இதையடுத்து எமரால்டு முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு அரிசி, பருப்பு, சோப்பு, எண்ணெய் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் வீடு இடிந்து பலியான சென்னன் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்பால் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கடந்த 2009-ம் ஆண்டு நீலகிரியில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டபோது, கூடலூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை சாலையில் ஏற்பட்ட சேதங்களை அப்போதைய மத்திய-மாநில அரசுகள் இணைந்து சீரமைத்தன. அதேபோல் தற்போது சாலையை சீரமைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலையோரத்தில் மழைநீர் செல்ல சிமெண்ட் கால்வாய் அமைத்து, மழைநீர் வடிந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள முகாம்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டு உணவு பொருட்களை உடனுக்குடன் வழங்கி பாதுகாக்க வேண்டும். 2 நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, முகாம்களில் தங்கி உள்ளவர்களை சந்தித்தேன். மாநில அரசு 2 அமைச்சர்களை அனுப்பி வைத்து உள்ளது. இது போதாது. அவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கவில்லை. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். நான் நீலகிரியில் 150 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததில் ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் பகுதியில் 150 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தி.மு.க. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.3 கோடி, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.2 கோடி, தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினர்கள் நிதியில் இருந்து ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும். ஆ.ராசா எம்.பி. நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு நடத்துவார். மேலும் பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையை நான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.