நெல்லை தாமிரபரணியில் பிணமாக மிதந்தவர் பற்றி துப்பு துலங்கியது: சிறுமியை கடத்துவதாக மிரட்டிய வாலிபரை கொன்று ஆற்றில் வீச்சு - 4 பேர் கைது


நெல்லை தாமிரபரணியில் பிணமாக மிதந்தவர் பற்றி துப்பு துலங்கியது: சிறுமியை கடத்துவதாக மிரட்டிய வாலிபரை கொன்று ஆற்றில் வீச்சு - 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2019 10:00 PM GMT (Updated: 12 Aug 2019 7:11 PM GMT)

நெல்லையில் 2 மாதங்களுக்கு முன்பு நெல்லை தாமிரபரணியில் பிணமாக கிடந்தவர் பற்றிய துப்பு துலங்கியது. சிறுமியை கடத்துவதாக மிரட்டல் விடுத்ததால் அவரை அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லை மணிமூர்த்தீசுவரம் தாமிரபரணி ஆற்றில் கடந்த ஜூன் மாதம் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர். அப்போது அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து ஆற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார், கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இதில் 2 மாதங்களுக்கு பிறகு தற்போது துப்பு துலங்கி உள்ளது.

அதாவது கொலை செய்யப்பட்டவர் டவுன் வழுக்கோடையை சேர்ந்த நாராயணன் (வயது 32) என்பதும், இவருக்கு பெற்றோர், உடன் பிறந்தோர் இல்லை என்பதும் தெரியவந்தது.

இவர் அந்த பகுதியில் வந்து செல்வோரிடம் பணம் பெற்று சாப்பிடுவதும், இரவு நேரங்களில் மதுக்கடை பகுதியில் நின்று கொண்டு மதுகுடிக்க வருவோரிடம் பணம் பெற்று மது குடிப்பதும் வேலையாக கொண்டிருந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி டவுன் கோட்டையடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவரிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் முருகன் பணம் தர மறுத்தார். அப்போது நாராயணன், மதுகுடிக்க பணம் தராவிட்டால் முருகனின் 12 வயது மகளை கடத்தி விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த முருகன், நாராயணனை டவுன் குருநாதன் கோவில் விலக்கு பின்புறம் உள்ள மாந்தோப்புக்கு மது அருந்த அழைத்து சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே தயார் நிலையில் நின்று கொண்டிருந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து நாராயணனை கட்டை மற்றும் கல்லால் அடித்து கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆட்டோவில் ஏற்றிச்சென்று மணிமூர்த்தீசுவரம் தாமிரபரணி ஆற்றில் வீசிவிட்டு தப்பி சென்றதும், சிறுமியை கடத்துவதாக மிரட்டல் விடுத்ததால் நாராயணனை தீர்த்துக்கட்டியதும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் முருகன், அவருடைய நண்பர்கள் பாறையடியை சேர்ந்த சுடலைமணி (25), ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (18), சுடலை (21) ஆகிய 4 பேரை தச்சநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் டவுன் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மூக்கன் என்ற மூக்காண்டி (35) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story